மழை வெள்ளப் பாதிப்புக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள வாரணாசி, பாட்னா நகரங்களில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரில் இரு வாரங்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. அதே நேரத்தில் கங்கையாற்றிலும் அபாய அளவைத் தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஒரு வாரக் காலத்துக்குப் பின்தான் வெள்ளம் வடியத் தொடங்கியது.
வெள்ளம் முழுவதுமாக வடிந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பியுள்ளதால் அங்குள்ள சந்தைக்குக் காய்கறிகள் வரத் தொடங்கியுள்ளன. இருப்பினும் வெள்ளப்பாதிப்பால் விளைச்சல் பாதித்ததாலும் குறைந்த அளவே காய்கறிகள் வருவதாலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதேபோல் பலத்த மழையாலும் கங்கையாற்று வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பீகார் தலைநகர் பாட்னாவிலும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விழாக்காலம் வருவதை முன்னிட்டு வெளிமாநிலச் சந்தைகளில் இருந்து காய்கறிகளைக் கொண்டுவந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.