மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், மாநகராட்சி வார்டு, நகர மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட இன்று விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், மேயர், நகர மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், மாநகராட்சி வார்டு, நகர மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்கள் அதற்கான கட்டண தொகையை பொதுக்குழு முடிந்தவுடன், 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்திற்கு ரசீதுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post