அமெரிக்காவில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த, 3 கட்ட திட்டங்களை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாகாண ஆளுநர்கள், தங்கள் பகுதிகளில் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திக் கொள்ள, மூன்று கட்ட திட்டங்களை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். முதற்கட்ட திட்டத்தை செயல்படுத்தும் போது, அனைத்து பகுதிகளிலும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் எனவும், பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது எனவும் குறிப்பிட்டார். அவசியமில்லாத வாகன போக்குவரத்துக்கான தடை தொடரும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். 2வது கட்ட திட்டத்தில், பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளியுடன் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 3வது திட்டத்தில், அலுவலகங்களில் வழக்கம் போல் ஊழியர்களை பணியாற்ற அனுமதிப்பது என திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திட்டத்தையும் 14 நாட்கள் கால இடைவெளியில் செயல்படுத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post