கோடை காலத்தை சமாளிக்கும் அளவிற்கு மின்உற்பத்தி உள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வருவாய்த்துறை சார்பில் வீட்டு மனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, 385 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் கோடை காலத்தில் ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டினை சமாளிக்கும் வகையில் மின்சார வாரியம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார். இதுவரை இல்லாத அளவாக 15 ஆயிரத்து 689 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தும் 16 ஆயிரம் மெகா வாட் தேவையான அளவிற்கு உற்பத்தி உள்ளது என்று தெரிவித்தார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.