பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனக் கூறி வந்த நிலையில், இந்தக் கருத்தைப் பாகிஸ்தானின் அரசு வழக்கறிஞரே மறுத்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விவாதிக்கப் பாகிஸ்தானின் நாடாளுமன்றம் உடனே கூட்டப்பட்டது, அங்குப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘‘காஷ்மீரில் நடந்தது இனப் படுகொலை. இது தொடர்பாக ஐ.நா. சபையிலும் சர்வதேச நீதிமன்றத்திலும் முறையிடுவேன்’’ என்று ஆவேசமாகப் பேசினார்.
இதன் பின்னர், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஐ.நா. சபை, ஜி 7 நாடுகள் உள்ளிட்டவற்றிடம் பாகிஸ்தான் புகார் செய்தது. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா. சபை மறுத்துவிட்டது. சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானின் பக்கம் நிற்கவில்லை. அந்த நிலையில், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து வழக்கு தொடுக்கப்போவதாக இம்ரான் கான் அடிக்கடி கூறி வந்தார்.
இந்தச் சூழலில் தற்போது பாகிஸ்தான் நாட்டுத் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பாகிஸ்தானின் சர்வதேச நீதிமன்ற வழக்கறிஞர் கவார் குரேஷி, ‘‘இந்தியாவுக்கு எதிராக நாம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், அங்கு சமர்ப்பிக்க இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை. இனப் படுகொலைக் குற்றச் சாட்டை நிரூபிப்பது மிகவும் கடினம். எனவே இப்போது வழக்குத் தொடுக்க முடியாது’’ என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக உலக நாடுகளின் தலைவர்கள், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பேசிவரும் நிலையில், பாகிஸ்தானின் அரசு வழக்கறிஞரும் பிரதமரின் கருத்துக்கு எதிராகக் கருத்து
தெரிவித்து உள்ளது இம்ரான்கானுக்கு கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி
உள்ளது.