வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் ,நிபுணர்களின் கணிப்புகள், என்னென்ன? – விளக்குகின்றது இந்தத் தொகுப்பு…
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கார்பரேட் நிறுவன வரி 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக சமீபத்தில் குறைக்கப்பட்டது.. ஆனால் அதேசமயம், இன்றும் நம் நாட்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் 30 சதவிகிதம் வரை வரி செலுத்துகின்றனர். இதனால் இவர்களின் வாங்கும் சக்தி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தனிநபர் வருமான வரி வரம்புகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2((வரி வரம்புகள் மாறினால் விற்பனைகள் அதிகரிக்கும்))
தனிநபர் வருமானவரி வரம்புகள் மாற்றப்படுவதன் மூலம் வீடுகள் விற்பனை, கார் விற்பனை, நுகர்பொருட்கள் விற்பனை – ஆகியவை அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்படும். இது விற்பனைகளில் உள்ள தேக்க நிலையை மாற்றும்.
3((வரி விலக்கு சலுகைகள் ரத்தாக வாய்ப்பு) )
தற்போது வீட்டுக்கடன், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி வரம்புகள் மாற்றப்பட்டால், இதுபோன்ற வரி விலக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட
வாய்ப்புகள் உள்ளன.
4(தனிநபர் வருமான வரிவரம்பு உயர வாய்ப்புகள் குறைவு)
தற்போது தனிநபர் வருமானவரி வரம்பு 2.5 லட்சமாக உள்ளது. ஆனால் கடந்த பட்ஜெட்டில் 5 லட்சத்திற்கும் கீழ் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு மட்டும் அளிக்கப்பட்டது. தனிநபர் வருமானவரி வரம்பு 2.5 லட்சம் என்பதில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுமா? – என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆனால் அப்படி உயர்த்தினால் வரி செலுத்தும் வரம்பிற்குள் உள்ளவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறையும் என்பதால் அதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
5(80 சி-யின் கீழான விலக்கு உயரும் என எதிர்பார்ப்பு)
வருமானவரி செலுத்துபவர்கள் பிரிவு 80 சி இன் கீழ் மொத்த வருமானத்திலிருந்து, குறிப்பிட்ட செலவினங்களுக்கு விலக்கு கோரலாம். இந்தப் பிரிவின் அதிகபட்ச விலக்கு 2014ஆம் ஆண்டு முதல் 1.5 லட்சமாகவே தொடர்கிறது. இதனை 2.5 லட்சமாக
உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இது குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
6(நடுத்தர மக்களின் வரிகளைக் குறைக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது)
தனிநபர் வருமான வரி தொடர்பாக 2019 ஆகஸ்டில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் டிடிசி (நேரடி வரிக் குறியீடு) பணிக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு இந்த பட்ஜெட்டிற்காக பரிசீலித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் நடுத்தர மக்களின் வருமான வரிகளைக் குறைத்து, பணக்காரர்களின் வருமானவரியை அதிகரிக்க பரிந்துரைத்து இருந்தது. எனவே அதன் தாக்கங்களை இந்த பட்ஜெட்டில் காண வாய்ப்புகள் உள்ளன.
7(நேரடி வரிகள் ஆய்வுக் குழுவின் பரிந்துரைகள் கணக்கில் கொள்ளப்படலாம்)
நேரடி வரிகளை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 சதவிகிதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவிகிதமும், ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை உள்ள வருமானத்திற்கு 30 சதவிகிதமும், ரூ.2 கோடிக்கு மேல் உள்ள வருமானத்திற்கு 35 சதவிகிதமும் தனிப்பட்ட வருமான வரி விதிக்க பரிந்துரைத்து இருந்தது. இதன் தாக்கம் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Discussion about this post