மத்திய பாஜக ஆட்சி அமைந்ததும் நதிகள் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் முதல்கட்டமாக கோதாவரி ஆறு காவிரியுடன் இணைக்கப்படும் என்று கோவை பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை துவக்கிய அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மீண்டும் மத்தியில் மோடி அரசு அமைந்து, நதிகள் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், முதல்கட்டமாக கோதாவரி ஆறு, காவிரியுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தன்னை ஆதரித்து பிரசாரம் செய்ய அமித்ஷா, மோடி, நிதின்கட்கரி, ஓ.பி.எஸ்., முதல்வர் ஆகியோர் கோவைக்கு வரவுள்ளதாகவும் கூறினார். அவருடன் வானதி சீனிவாசன், கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
Discussion about this post