மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தல், கட்சிகள் கைப்பற்றிய தொகுதிகள், கூட்டணி மாறிய காரணம், அதிரடியாக பாஜக ஆட்சியமைத்தது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஆகியவை குறித்த ஒரு தொகுப்பு
மகாராஷ்டிரச் சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் பாஜக – சிவசேனா ஓரணியாகவும், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் மற்றோர் அணியாகவும் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக 105 தொகுதிகளையும், சிவசேனா 56 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளையும், காங்கிரஸ் 44 தொகுதிகளையும் கைப்பற்றின. மீதமுள்ள இடங்களில் சிறு கட்சிகளும் சுயேச்சைகளும் வெற்றிபெற்றனர். பாஜக – சிவசேனா கூட்டணி இணைந்து அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் அந்தக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ்தான் முதலமைச்சர் என பாஜக உறுதியாகத் தெரிவித்தது. முதல் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியைத் தங்களுக்குத் தர வேண்டும் என சிவசேனா பிடிவாதம் பிடித்தது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியதுடன் மத்திய அமைச்சரவையில் இருந்து அந்தக் கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் பதவி விலகினார்.
முந்தைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடியும் வரை எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் நவம்பர் 12ஆம் தேதி ஆளுநர் பகத்சிங் கோசியாரியின் பரிந்துரையை அடுத்து மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதேநேரத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவதற்கு சிவசேனா தீவிரமாக முயன்றது. சரத்பவாருடன் சிவசேனா தலைவர்கள் பல கட்டப் பேச்சு நடத்தியும் அவர் பிடிகொடுக்கவில்லை. காங்கிரசின் முடிவைப்பொறுத்தே தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியும் எனக் கூறிவிட்டார்.
இந்நிலையில் நவம்பர் 23ஆம் தேதி அதிகாலையில் மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. காலை 8 மணிக்கு முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணைமுதலமைச்சராகத் தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பதவியேற்றனர். பதவியேற்ற சிறிது நேரத்தில் அஜித் பவாரின் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும், பாஜகவுக்குத் தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை என்றும் சரத் பவார் அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்களிடம் வருகைப் பதிவின்போது கையொப்பம் பெற்ற தாளை ஆதரவுக் கடிதம் எனக் கூறி ஆளுநரிடம் வழங்கி அஜித் பவார் மோசடி செய்துவிட்டதாகத் தேசியவாத காங்கிரசின் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், தேவேந்திர பட்னாவிசும் அஜித் பவாரும் பதவியேற்கும் வரை காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் சிவசேனாவுக்கு ஆதரவு என வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதுவரை பிடிகொடாத இரு கட்சிகளும் சிவசேனாவுடன் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. பாஜகவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்ததை எதிர்த்தும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காகக் கருதி ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரமணா, அசோக் பூசண், சஞ்சீவ் கண்ணா அமர்வு விசாரித்தது. பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அஜித் பவார் கொடுத்த கடிதம், ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுத்து ஆளுநர் கொடுத்த கடிதம் ஆகியவற்றைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரவின்படி இரு கடிதங்களையும் அரசு வழக்கறிஞர் துசார் மேத்தா, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவையில்லை எனவும் துசார் மேத்தா வாதிட்டார். மூத்த உறுப்பினரை அவைத் தலைவராக நியமித்து வீடியோ பதிவுடன் 24 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகளின் வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி, குறித்த நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை நாளை பத்தரை மணிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியமைத்தது அரசியல் சட்டப்படி செல்லுமா? நவம்பர் 30ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்டலாம் என ஆளுநர் காலக்கெடு வழங்கியுள்ள நிலையில், அதற்கு முன்பு, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? என்பன உள்ளிட்ட பல்வேறு வினாக்களுக்கு விடையாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வெளியாக உள்ளது.
Discussion about this post