சென்னையில் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்யும் வகையில், கொடுங்கையூரில் பிரம்மாண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 348 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் சிறப்பு அம்சங்கள் இதோ…
பருவமழை பொய்த்துப் போவதால் சென்னையில் அவ்வப்போது தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாகக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தம் கைழுத்தானது. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன. பிறகு கொடுங்கையூர், கோயம்பேடு ஆகிய இரண்டு இடங்களில் ஒரு நாளைக்கு நாலரைக்கோடி லிட்டர் சுத்திகரிப்புத் திறன்கொண்ட இரண்டு ஆலைகள் அமைக்கப்பட்டன. வடசென்னை மற்றும் மத்திய சென்னையில் இருந்து நாள்தோறும் வெளியேற்றப்படும் 23 கோடி லிட்டர் கழிவுநீர் வீணாக பக்கிம்காம் கால்வாய் வழியாகக் கடலில் கலக்கிறது. இதனை மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது மூன்றாம் நிலை அதிநவீன சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
முதலில் பிளாஸ்டிக் மற்றும் பெரிய அளவிலான குப்பைகள் ஸ்கிரின் ஜாம்பர் மூலம் அகற்றப்படுகிறது. பின்னர் ராட்சத குழாய் மூலம் நீரினை செலுத்தி, குளம்போல் தேக்கி மணல் மூலம் வடிகட்டப்படுகிறது. இதன்பிறகு தேவைக்கேற்ப பெரிய மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு குழாய் வழியாக கிருமிகளை அழிக்கக்கூடிய பகுதிக்கு அனுப்பப்படுகிறது.
இங்கு திரவ குளோரின்-டை-ஆக்சைடு என்கிற வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது. பின் வடிகட்டும் இடமான பில்டர் பிளாக்சோன் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. அங்கு, மணல் திட்டு அமைக்கப்பட்டு பாசி போன்ற கழிவுகள் வடிகட்டப்படுகிறது. அதன் கீழ் இரண்டாவது அடுக்கில் பெரிய அளவிலான கூழாங்கற்கள் மூலமும், அதன் கீழ் சிறிய கூழாங்கற்களாலும் வடிகட்டப்படுகிறது.
பிறகு ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ultra filteration என்ற அதிநவீன இயந்திரங்கள் மூலம் சோடியம் ஹைட்ராக்சைடு, ஹைட்ரோ குளோரைடு, சோடியம்-பை-சல்பேட், பெரிக் குளோரைடு ஆகிய வேதிப் பொருட்களைக் கொண்டு 80 சதவீதக் கிருமிகள் அழிக்கப்படுகிறன.
பிறகு RO எந்திரங்கள் மூலம் முழுமையாகக் கிருமிகள் அகற்றப்பட்டுக் குடிக்க தகுந்ததாக மாற்றப்படுகிறது. இந்த நீர் சுரங்கக் குழாய்கள் மூலம் கொடுங்கையூர் முதல் காட்டுப்பள்ளி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய தொழிற்சலைகளுக்கு வழங்கப்படும். இதுபோல், சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குடிக்கவே பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post