ஒசூரில் புதிய தொழிற்சாலை தொடங்கப்பட்டு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், 20 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் பன்னாட்டு மலர் ஏல மையத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் மலர் சாகுபடி அதிகளவில் உள்ளது என்றும், இங்குள்ள விவசாயிகள் மலர் விற்பனைக்காக கர்நாடகா செல்ல வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பன்னாட்டு மலர் ஏல மையம் ஒசூரில் அமைக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஒசூர் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கொரோனா காலத்திலும் அரசு சுணக்கம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
Discussion about this post