சென்னையில் விதிகளை மீறி பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் படிவம்-1யை பூர்த்தி செய்து அனுமதி கோரும் நாளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்று, பேனர் அமைக்கப்பட உள்ள இடம் உள்ளிட்ட தகவல்களுடன் சென்னை மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அனுமதி கட்டணம் 200 ரூபாய், காப்பீட்டு கட்டணம் 50 ரூபாய் வரைவோலையாக செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஆணையர், அனுமதி பெறாமல் அமைக்கப்படும் விளம்பர பதாகைகள் உடனடியாக அகற்றப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அனுமதி வழங்கப்படும் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகளின், கீழ் பகுதியில் அனுமதி எண், அனுமதிக்கான கால அவகாசம், அச்சகத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விதிகளை மீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள் குறித்து 1913 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post