மேட்டூர் அணை நிறைந்து உள்ள நிலையில், தமிழகத்தில் மழைப் பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரையும், மழை நீரையும் திறம்பட பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
தமிழக நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் அதி முக்கியத் திட்டமாக குடிமராமத்துத் திட்டம் உள்ளது. தமிழகத்தின் நீர் இருப்பையும், நீர் ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கோடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட திட்டம்தான் இந்த குடிமராமத்துத் திட்டம்.கல்வெட்டுகளின்படி கரிகாலச் சோழன் காலத்தில் தமிழகத்தில் காணப்பட்ட குடிமராமத்துத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீட்டெடுத்து மீண்டும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள வரத்து வாய்க்கால்கள், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை சீரமைத்து பலப்படுத்துதல், கலிங்குகள் மற்றும் மதகுகளை மறுகட்டமைப்பு செய்தல், நீர்த் தடங்களில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பணிகள் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. முதன்முதலில் 2017ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி ரூபாய் 100 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட குடிமராமத்துத் திட்டம், மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் 2018ம் ஆண்டு இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து கூடுதலாக 2065 குடிமராமத்து பணிகளுக்கு 331 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகள் நடைபெறுவதை கண்காணிக்க 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆரம்பிக்கப்பட்ட பணிகள் அனைத்து வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு மூன்றாம் கட்டமாக, 1829 குடிமராமத்து பணிகளுக்கு 499 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சேலம், ஈரோடு, கடலூர், நாமக்கல், திருச்சி, தர்மபுரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களிலும், விழுப்புரம், கோவை, விருதுநகர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், திருப்பூர், சிவகங்கை, மதுரை, நெல்லை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற பிற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கெல்லாம் மூன்றாம் கட்ட குடிமராமத்துப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை 60% பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் குறித்தும் அதிகாரிகள் அவ்வபோது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குடிமராமத்துத் திட்டத்தின் கீழான ஒட்டுமொத்த பணிகளையும் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலாஜியை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நீர் நிலைகளை பாதுகாத்து தூர் வார சிறப்பு நிகழ்வாக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த பணிகள் அனைத்தையும் பருவமழைக்கு முன்னர் முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்தத் தொலைநோக்கு நடவடிக்கைகளால் மேட்டூர் அணையின் நீரும், தமிழகத்தின் மழை நீரும் மக்களுக்கு மிக அதிக அளவில் பயன்பட வழி ஏற்பட்டு உள்ளது.
Discussion about this post