பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கனடாவில் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோ தனது 6 திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த கனடா நாட்டின் அதிபர் தேர்தலில், தமிழர்களின் பேராதரவு பெற்ற வேட்பாளரான ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், அவர் தனிப் பெரும்பான்மையைப் பெறாததால் கூட்டணி அமைத்தே ஆட்சியைப் பிடித்தார். இதனால் அவர் தனது திட்டங்களை செயல்படுத்த கனட நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை
உள்ளது.
இந்த சூழலில் தற்போது, அதிபர் ட்ரூடோவின் ஆறு புதிய திட்டங்களை கனடாவின் கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் அறிவித்து உள்ளார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் கனடா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், அதில் வென்றால் மட்டுமே அமல்படுத்தப்படும். இந்த ஆறு திட்டங்களைப் பற்றி கூற வேண்டும் என்றால், கனடா நாட்டின் மாகாணங்களுக்கு இடையே உள்ள சச்சரவுகளைத் தீர்த்து, தேச ஒற்றுமையை நிலைநாட்டுவது முதல் திட்டமாகவும்,
நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில், செல்பேசிகள் மற்றும் வயர்லெஸ்களின் கட்டணத்தை 25% குறைப்பது, மக்களின் குறைந்தபட்ச வருவாயை அதிகரிப்பது ஆகியவை இரண்டாவது திட்டமாகவும்,
சுற்றுச் சூழல் மேம்பாடு குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தின் போது கனடா அளித்த வாக்குறுதிகளின்படி, நச்சுவாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மூன்றாவது திட்டமாகவும்,
கனடா மக்களின் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை நான்காவது திட்டமாகவும், கனடாவில் உள்ள பழங்குடி மக்களுடன் நல்லிணக்கத்தைத் தொடர்ந்து பேணுவதை ஐந்தாவது திட்டமாகவும்,
கனடாவில் தொடரும் துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக, துப்பாக்கிகளை வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதை ஆறாவது திட்டமாகவும் கனடா அதிபர் ட்ரூடோ முன்வைத்து உள்ளார்.
ட்ரூடோவின் திட்டங்களை கனடிய நாடாளுமன்றம் ஏற்கவில்லை என்றால் அது கனடாவில் மீண்டும் ஒரு தேர்தல் ஏற்படும் சூழலை ஏற்படுத்தும். ஆனால், அந்த சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என்றே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Discussion about this post