இளையராஜா 75 நிகழ்ச்சியை ஏன் 2 வாரம் கழித்து நடத்தக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ஜெ. சதீஷ் குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும், பொதுக்குழு உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் ஓய்வுதிய தொகையை 12 ஆயிரமாக உயர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு அனைவரிடம் இருந்தும் நிதி திரட்டிய பின் இளையராஜாவிற்கு வழங்கப்படும் என விஷால் கூறிய நிலையில் முன்கூட்டியே இளையராஜாவுக்கு ஏன் 3.5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தயாரிப்பாளர் சங்க தலைவர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் இளையராஜா 75 நிகழ்ச்சியை ஏன் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நிகழ்ச்சிக்கான ஒப்பந்த ஆவணங்களை மனுதாரர்களிடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
Discussion about this post