மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து, வருகிற 8-ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், மத்திய அரசைக் கண்டித்து வருகிற 8-ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, அரசு அலுவலகங்களில் எந்த வகையிலும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, 8-ம் தேதி, பணிக்கு வராத ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு நாள் ஊதியம் ரத்து செய்யப்படும் என்பதைத் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 8-ம் தேதி பணிக்கு வாராதவர்கள் பற்றிய விபரங்களை, 8-ம் தேதி காலை 10.30 மணிக்குள் இணை இயக்குனரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை, பணிபுரிவோர் எண்ணிக்கை, முன் அனுமதியுடன் விடுமுறை எடுத்தவர்கள் விபரம், அனுமதி பெறாமல் பணிக்கு வராதவர்களின் விபரங்களைக் அதில் தெளிவாகக் குறிப்பிடும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post