ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை போலவே டெஸ்ட்டிலும் சாம்பியன்ஷிப் கோப்பையை ஐசிசி அறிமுகப்படுதியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், டெஸ்ட் தரவரிசையில், முதல் 9 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே பங்குபெறும் வகையில் ஐசிசி விதிகளை வகுத்துள்ளது. இதற்கு முன்னதாக முதல் முறையாக கடந்த 2010 ஆம் ஆண்டே டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை அறிமுகப்படுத்த ஐசிசி தீவிர முயற்சி மேற்கொண்டது. அதேபோலே 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த சாம்பியன்ஷிப் போட்டி தொடர்பாக விதிமுறைகளை ஐசிசி வகுத்துள்ளது. அதன்படி 9 அணிகளும் தங்கள் விருப்பபடி 2 நாடுகளுடனான தொடரை தவிர்த்து, இரண்டு ஆண்டுகளுக்கு 6 டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும். இதில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடனான தொடரை தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடக்கும் 6 தொடர்களில் மூன்று தொடர்கள் சொந்த மண்ணிலும் மற்ற மூன்று தொடர்கள் வெளிநாட்டு மண்ணிலும் விளையாட வேண்டும். ஒவ்வொரு டெஸ்ட் தொடர்களுக்கும் 120 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் புள்ளிகள் தொடரின் அடிப்படையில் அல்லாமல் போட்டியின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு அணிகளும் மாறுபட்ட எண்ணிகையை கொண்ட தொடரில் விளையாடும். அது 2 முதல் அதிகபட்சமாக 5 போட்டிகள் கொண்ட தொடர்களாக இருக்கும். 6 டெஸ்ட்களில் விளையாடும் போது அனைத்திலும் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக ஒரு அணி 720 புள்ளிகளை எடுக்க முடியும். இரண்டு வருட முடிவில், அதிக புள்ளிகளை எடுக்கும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் செல்லும்.
தற்போது தொடங்க உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர் இந்தாண்டு ஆகஸ்ட் முதல் வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் போட்டிகளை கொண்டதாக இருக்கும்.
தற்போது ஐசிசி வகுத்துள்ள விதிகள் படி டெஸ்ட் தொடருக்கு புள்ளிகள் வழங்கப்படும் முறைகளை பார்ப்போம்…
2 போட்டி கொண்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 60 புள்ளிகளும் ஆட்டம் டையில் முடிந்தால் 30 புள்ளிகளும் டிராவில் முடிந்தால், 20 புள்ளிகளும் வழங்கப்படும்.
3 போட்டி கொண்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 40 புள்ளிகளும் ஆட்டம் டையில் முடிந்தால் 20 புள்ளிகளும் டிராவில் முடிந்தால், 13.3 புள்ளிகளும் வழங்கப்படும்.
4 போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 30 புள்ளிகளும் ஆட்டம் டையில் முடிந்தால் 15 புள்ளிகளும் டிராவில் முடிந்தால், 10 புள்ளிகளும் வழங்கப்படும்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 24 புள்ளிகளும் ஆட்டம் டையில் முடிந்தால் 12 புள்ளிகளும் டிராவில் முடிந்தால், 8 புள்ளிகளும் வழங்கப்படும்.
ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்க உள்ள இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறும் பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளது.
இந்திய அணியை பொறுத்த வரை, அடுத்த 2 ஆண்டுகளில் 6 டெஸ்ட் தொடர்களை எடுத்து கொண்டால், மொத்தம் 18 போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் 10 போட்டிகள் சொந்த மண்ணிலும் 9 போட்டிகள் வெளிநாட்டிலும் விளையாட உள்ளது. மேற்கிந்திய தீவுகளுடன் 2 போட்டிகளும் தென் ஆப்பிரிக்காவுடன் 3 போட்டிகளும், வங்கதேசத்துடன் 2 போட்டிகளும், நியூஸிலாந்துடன் 2 போட்டிகளும், ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகளும், இங்கிலாந்துடன் 5 போட்டிகளிலும் விளையாட உள்ளது. தற்போது மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில், இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இதன்பிறகு ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்பட உள்ள நிலையில், முதல் முறையாக கோப்பையை வென்று வரலாறு படைக்கப் போகும் அணி எது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்…
Discussion about this post