கவிஞர் வைரமுத்து மீது விரைவில் வழக்கு தொடர உள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர்கள் அரங்கத்தில் தென்னிந்திய திரைப்பட பெண்கள் அமைப்பின் சார்பாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகி சின்மயி, எழுத்தாளர் லீனா மணிமேகலை உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பாடகி சின்மயி, 15 வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து செய்த பாலியல் சீண்டல் குறித்து விரைவில் வழக்கு தொடர உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை தற்போது திரட்டி வருவதாகவும் தெரிவித்தார். வழக்கறிஞர்களிடம் இது குறித்து பேசி வருவதாகவும் கூறினார்.
மதன் கார்க்கி தனது நீண்ட நாள் நண்பர் என்றும் தனது திருமணத்திற்கு அவருக்கு மட்டும் அழைப்பிதழ் வழங்கிவிட்டு, அவரது தந்தைக்கு வைக்கவில்லை என்றால் சிக்கல் ஏற்படுமோ? என்று தான் வைரமுத்துவிற்கு அழைப்பிதழ் கொடுத்ததாக குறிப்பிட்ட அவர், திருமணத்திற்கு வந்திருந்த 50-க்கும் மேற்பட்டோர் கால்களில் தான் விழுந்ததாகவும் அந்த வரிசையில் வைரமுத்து காலில் விழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
வைரமுத்து குறித்து பெண்கள் அனைவருக்கும் தெரியும் என்றும், ஆண்களுக்கு தெரிவதில்லை என்றும் கூறிய அவர், தனது திருமணத்திற்குப் பின்னர் நிகழ்ச்சி ஒன்றிற்கு தொகுத்து வழங்க வைரமுத்து தன்னை அழைத்த போது அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.
இவ்வாறு இருக்க கூடிய நிலையில், பாலியல் சீண்டல் குறித்து தற்போது கருத்து தெரிவிக்கும் போதே பலரும் தகாத வார்த்தைகளால் சமூகவலைத்தளங்களில் தன்னை திட்டுவதாகவும் அவர் கூறினார். 15 வருடங்களுக்கு முன்பு இதனை கூறியிருந்தால் தனக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பெண்களுக்கு பணி செய்யுமிடத்தில் உரிய பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதை சமூகத்தில் இருக்கக்கூடிய அனைவரும் உணர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
Discussion about this post