டோக்கியோவில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே தனது லட்சியம் என, தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று முடிந்தன. இதனைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகள், வரும் 24ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உட்பட 54 வீரர், வீராங்கனைகள் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம், பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என, பிரதமர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின்போது, தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, மாரியப்பனின் வெற்றிப் பயணம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். அப்போது பேசிய மாரியப்பன், பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தனது ஒரே லட்சியம் என கூறினார். தனது சிறு வயதில், விபத்து ஒன்றில் தனது காலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், துவண்டுவிடாமல் சிறப்பான பயிற்சி மேற்கொண்டு, கடந்த 2011ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், மீண்டும் ஒருமுறை நாட்டுக்கு பெருமை தேடித்தருவேன் என உறுதிபடக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அவரது தயார் மற்றும் சகோதரர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்பேது பேசிய மாரியப்பனின் தயார் சரோஜா, தனது மகன் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post