ஹூண்டாய் நிறுவனம் தனது மின்சார கார் தயாரிப்பை சென்னையில் முழு வீச்சில் மேற்கொள்ள உள்ளது.
மின்சார கார் தயாரிப்பிற்காக 2000 கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்து, 10 லட்சம் மின்சார கார்களைத் தயாரிக்கும் திட்டத்தை ஹூண்டாய் நிறுவனம் வகுத்துள்ளது. சென்னையில் உற்பத்தியாகும் இந்த கார்கள், மினி எஸ்யுவி கார்களாகவும், வெவ்வேறு வடிவங்களில் இருக்கும் எனவும் தெரிகிறது. இந்தக் கார்கள் மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. மத்திய அரசு மின்சார கார் தயாரிப்பதை ஊக்குவித்து வரும் நிலையில், கடந்த ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமான வரிச் சலுகை அறிவிக்கப்பட்டது.
மின்சார கார்களுக்கு ஏற்ற சந்தைச் சூழல் இந்தியாவில் உருவாகியுள்ளதால், வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக இதில் கவனம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. அண்மையில் ஹூண்டாய் தனது முதல் மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கோனா என பெயரிடப்பட்டுள்ள இந்த எஸ்யுவி காரின் விலை 25 லட்சம் ரூபாய் என்பதால், கார் வாங்கும் ஆசை உள்ளவர்களை இந்தக் கார் பெரிதும் கவரவில்லை. இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கும் மின்சார கார்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் எனவும், அரசு அளிக்கும் வரிச் சலுகை காரணமாக, வாடிக்கையாளர்கள் மின்சார கார் பக்கமே ஆர்வம் காட்டப்போகிறார்கள் எனவும் ஹூண்டாய் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post