ஐதராபாத்தில் என்கவுண்டரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
ஐதராபாத்தில் கால்நடை மருத்துவரைப் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தெலங்கானா காவல்துறை சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் உறுதிப்படுத்திய பின்னரே 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததாகத் தெரிவித்தார். காவலரின் துப்பாக்கிகளைப் பறிக்க முயன்றதாலேயே தற்காப்பிற்காகச் சுட்டதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றமும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே, ஊகத்தின் அடிப்படையில் எதையும் உண்மை எனக் கருதிவிட முடியாது எனத் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிர்புர்கர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்தோடா, சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் ஆகிய மூவர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்தக் குழு 6 மாதத்தில் தனது விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டார்.