நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே, பெண் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது கணவர் உள்பட 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நடுக்கோம்பை பங்களா தோட்டத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மாலை மோகன் தனது மனைவி கவுசல்யா வசித்த வீட்டிற்குச் சென்று பணம் கேட்டுத் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தகராறில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த மோகன், கவுசல்யாவைத் தடியால் அடித்தும், இரும்புக் கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியும் கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று கவுசல்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட மோகன், மனைவியைக் கொன்றது தொடர்பாகப் பரபரப்பு வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார்.
அதில் மனைவி கவுசல்யா நிலத்தை விற்றதில் கிடைத்த பணத்தில் சுமார் ரூ.50 லட்சம் வரை வாங்கி வங்கியில் டெபாசிட் செய்து கொண்டதாகவும், அந்தப் பணத்தைக் கேட்டது தொடர்பாக மோகனுக்கும் கவுசல்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால் கவுசல்யா குழந்தைகளையும் சரிவரக் கவனிக்காமல், தன்னையும் அலட்சியப்படுத்தி வந்ததால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக மோகன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதற்கிடையில் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மோகனின் தம்பி தங்கவேலு என்பவரும் கைது செய்யப்பட்டு அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post