“லாரா” புயலால் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலை கடுமையாக சேதமடைந்தது. அதில் இருந்து நச்சுப்புகை வெளியேறி வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. “லாரா” புயலால் அமெரிக்காவின் லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. லூசியானா மாகாணத்தின் கேம்ரான் பகுதி அருகே கரையைக் கடந்த லாரா புயலால், மணிக்கு 280 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பல அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன. முன்னெச்சரிக்கையாக மாகாணங்களின் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனிடையே, லாரா புயலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக லூசியானா மாகாண அரசு தெரிவித்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, லூசியானா மாகாணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட ரசாயன ஆலையிலிருந்து நச்சுப்புகை வெளியேறுவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நச்சுப்புகையால் காற்று மாசடைந்துள்ளதாகவும், மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் லூசியானா மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post