புகையிலைப் பழக்கங்களைக் கைவிடுவதற்கான ஆலோசனைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
புகைப்பது, புகையிலையை அடக்குவது, மூக்குப்பொடி போடுவது – என புகையிலைப் பழக்கத்தின் அனைத்து வடிவங்களும் தீங்கானவையே. அது ஸ்டைல் அல்ல சுகாதாரக் கேடு என்பதை உணருங்கள்.
நம்மில் யாரும் புகையிலையைப் பயன்படுத்தும் பழக்கத்தோடு பிறக்கவில்லை, இடையில் வந்த பழக்கத்தை நீங்கள் மனதுவைத்தால் இடையிலேயே விடலாம் என்பதை முதலில் நம்புங்கள்.
உலகெங்கும் 3% பேர் புகையிலையை ஒரே நொடியில் தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுக்காகக் கைவிடுகிறார்கள். உங்களை நேசிப்பவர்களுக்குக் கொடுக்கும் பரிசாக இதைக் கருதுங்கள்.
உடனடியாக புகையிலையைக் கைவிடும் போது அதனால் கோபம் உள்ளிட்ட சில விளைவுகள் ஏற்படக்கூடும், எனவே புகையிலையைக் கைவிடுபவர்கள் அதுகுறித்து நெருக்கமாக உள்ளவர்களிடம் முன்பே கூறிவிடுங்கள்.
சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட நாளை இலக்காக வைத்து, படிப்படியாகவும் புகையிலைப் பயன்பாட்டை நிறுத்தலாம். இது எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாது. இதற்கு முயற்சித்துப் பாருங்கள்.
புகையிலைப் பழக்கத்தை விட்டவர்கள் மீண்டும் அதன் நினைவு வரும் போது கடலை மிட்டாய், சாக்லேட், மிண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் கவனம் திரும்பும். தனக்கு பிடித்தவர்களை நினைத்துப் பார்ப்பது கூட பலன் தரும்.
புகையிலைப் பழக்கத்தை கைவிடும் முயற்சியில் உள்ளவர்கள் அதற்காக வீட்டிலேயே இருக்க வேண்டியது எல்லாம் இல்லை. எந்த வேலையும் இதனால் கெடாது. இயல்பாக இருப்பதே மிகநல்லது.
புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுவது கடினமாக இருந்தால் நண்பர்கள், மருத்துவர்கள், மனநல நிபுணர்களின் உதவிகளை தயக்கமின்றி பெறுங்கள். சிகரெட்டைக் கைவிடும் முயற்சியில் ஒருபோதும் பின் வாங்காதீர்கள்.
Discussion about this post