காலரா, டெங்கு, ஃப்ளூ, எபோலா வரிசையில் இப்போது அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் பரவலை முன்னெச்சரிக்கையாக எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…
1998 , 99 காலகட்டங்களில் மலேசியாவின் நிபா கிராமத்தில்தான் முதன்முறையாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வௌவால்களின் சிறுநீர், கழிவுகள் மற்றும் எச்சம் ஆகியவற்றிலிருந்தும், வௌவால்கள் கடித்த பழங்களை உண்பதன் மூலமும் இந்த நோய் பரவத்தொடங்கியது. பின் பன்றிகள், குதிரைகள், பூனைகள் உள்ளிட்ட வீட்டு விலங்குகளுக்கும் பரவியது.
ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் இந்த நோய்க்கு இதுவரை தடுப்பூசிகளோ, எதிர் மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான ஆய்வுகள் தொடர்ந்துவண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வாங்கும்பொழுது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வவ்வால் கடி போன்ற பற்தடங்கள் இல்லாத பழங்களை தேர்வு செய்ய வேண்டும்.
பழச்சாறாக அருந்தாமல் நேரடியாக பழங்களை வாங்கி மேல் தோல்நீக்கி உண்ணவும்.
செல்லப்பிராணிகளுக்கு உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் உடனடியாக சிகிச்சை செய்வதோடு செல்லப்பிராணிகளின் இருப்பிடங்களிலிருந்து விலகி இருக்கவும்.
குழந்தைகளை செல்லப்பிராணிகளிடமிருந்து விலக்கி வையுங்கள்.
பெரும்பாலும் கையுறை அணிந்துகொண்டு செல்லப்பிராணிகளை கையாளவும்.
வவ்வால்கள் அதிகம் பனை முதலிய உயரமான மரங்களில் இருப்பவைகள் என்பதால் பனம்பழம், நுங்கு, பதநீர் போன்றவைகளை எடுத்துக்கொள்வதில் கவனம் தேவை.
சோர்வு, தொடர் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அனுகவும்.
மருத்துவமனைகளில் சோதனை மாதிரிகளை தேர்ந்த சோதனையாளரைக் கொண்டு ஆய்வு செய்யவும்.
வெளியூர் சுற்றுலா செல்பவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மனித குல வரலாற்றில் புதுப்புது நோய்களால் மனிதன் பாதிக்கப்பட்டு மீள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பங்களால் அரசின் துரிதமான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளாலும் பாதிப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நிபா வைரசால் இதுவரை தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. எனினும் சூழலை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை
Discussion about this post