ஆக்சிஜனை தயாரிப்பது துவங்கி, அதனை திரவ நிலையில் பராமரிப்பது வரையிலான செயல்முறைகள், சிக்கல் நிறைந்தது. சவாலான இந்தப் பணியை கவனத்துடன் மேற்கொள்ளும் அரசு, தனியார் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் சுவாசிப்பதற்கு ஏற்ற வாயுவாக மாற்றி வழங்கி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தித் திறன், ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் ஆகும். இதில், தற்போது ஒரு நாளைக்கு 240 டன் ஆக்சிஜன் வரை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆயிரத்து 200 டன் ஆக்சிஜன் வரை சேமித்து வைக்கும் திறன் தமிழகத்தில் உள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி செய்கின்ற நிறுவனங்களில் இருந்து, மைனஸ் 183 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், பிரத்யேக டேங்கர்கள் மூலம், திரவ ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு எடுத்து வரப்படுகிறது. பின்னர், மருத்துவமனையில் உள்ள ராட்சத சிலிண்டர்களில் பாதுகாப்பான முறையில் குழாய் மூலம் நிரப்பப்படுகிறது. இவ்வாறு நிரப்பப்பட்ட திரவ ஆக்சிஜன், வாயுவாக மாற்றப்பட்டு, சுவாசிக்க ஏற்ற ஈரப்பதத்துடன் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்கிறார், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையின் ஆக்சிஜன் கண்காணிப்புதுறை தலைவர் முருகன்.
மருத்துவமனையின் வார்டுகளுக்கு குழாய் மூலம் எடுத்துவரப்படும் ஆக்சிஜன், நோயாளிகளுக்கு தேவையான அளவு கொடுக்கப்படுகிறது. நோய் தொற்றின் தீவிரத்தை பொறுத்து, 4 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்படுவதாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி கூறுகிறார்.
அரசு மருத்துவமனைகளை பொருத்தவரையில், வார்டுகளில் சிலிண்டர்களில் அடைக்கப்பட்ட ஆக்சிஜனும் பயன்படுத்தப்படுகிறது. ராட்சத சிலிண்டரில் இருந்து ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால், அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள, சிறிய வகை சிலிண்டர்களிலும் ஆக்சிஜன் நிரப்பி வைக்கப்படுகிறது. ஆக்சிஜன் வழங்கும் பணிக்காக, மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மயக்கவியல் துறை சார்பில் தனி குழுவே செயல்படுகிறது.
இதன் மூலம், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், தேவையான நேரத்தில், பாதுகாப்பாக வழங்கப்படுகிறது.