பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு புதிய பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்தநிலையில், தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கல்வி திட்டம், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
12 ஆண்டுகளுக்கு மேலாக மேல் நிலை பாட திடங்களில் மாற்றம் கொண்டு வரப்படாமலும், மேம்படுத்தப்படாமலும் இருந்தது. இந்த நிலையில், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, 12ஆம் வகுப்பு முடித்த அனைவருக்கும் வேலை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய பாட திட்டம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் அடிப்படையில், புதிய பாட திட்டம் அமைப்பது குறித்தும் இரு மொழி கொள்கை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் பல கட்டங்களாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக இந்த கல்வி ஆண்டு முதல் புதிய பாட திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும், 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளின் பாட திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புதிய பாட திட்டத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த பாட திட்டம் 21ஆம் நூற்றாண்டின் அனைத்து மாற்றங்களையும் உள்ளடக்கியதாக உள்ள நிலையில், வரும் தலைமுறையின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும் என்பதில் மாற்றம் இல்லை என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், செயல்வடிவ விளக்கம் மாணவர்களின் கேள்விக்கு அவர்களே விடையை சிந்துத்து தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, இரு மொழி கொள்கை தொடரும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் விதமாக புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளது என இதற்கு பெற்றோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த கல்வி ஆண்டு மாணவர்களுக்கு சீருடையில் மாற்றம், கல்வி முறையில் மாற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. புதிய மாற்றங்களுடன் தொடங்கியுள்ள இந்த கல்வி ஆண்டு மாணவர்களுக்கு சிறந்த வகையில் அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
Discussion about this post