நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோனூரைச் சேர்ந்த எல்.முருகன் அரசியலில் ஒவ்வொரு அடியாக முன்னேற ஆரம்பித்தார்.
சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று சட்டப்பேரவையை அலங்கரிப்பார்கள் என அப்போதே எல்.முருகன் சூளுரைத்தார். அதேபோன்று, அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், தாராபுரம் தொகுதியில் களமிறங்கினார்.
இதனால், நட்சத்திர தொகுதியாக மாறிய தாராபுரத்தில், பிரதமர் மோடி தொடங்கி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலரும் பரப்புரை மேற்கொண்டனர். எல்.முருகன் மீது மேலிடத் தலைவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக அமைந்தது.
தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் வெற்றிவாய்ப்பை நழுவ விட்டாலும், அவர் கூறியது போலவே, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையை பாஜக உறுப்பினர்கள் அலங்கரித்தனர். பாஜக உறுப்பினர்களை சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்ததால் அப்போதே, எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, தற்போது அமைச்சரவை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் எல்.முருகன். இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அடிப்படையில், சட்டக்கல்வி முடித்து வழக்கறிஞரான எல்.முருகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டு காலம் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சட்டப்படிப்பில் இவர் முனைவர் பட்டமும் பெற்றவர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தது, இவரை நாடறியச் செய்தது. இந்நிலையில் தற்போது, மத்திய அமைச்சராகியுள்ளார் எல்.முருகன்.
முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இரண்டு தமிழர்கள் மத்திய அமைச்சரவையை அலங்கரித்து வந்த நிலையில், தற்போது, மத்திய அமைச்சராகியுள்ளார் எல்.முருகன். தேசிய அரசியலின் கவனம் தமிழகத்தின் மீது அழுத்தமாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடாகவும், இந்த அமைச்சர் பதவி பார்க்கப்படுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் உலவி வருகின்றன.