ஏற்றமும் இறக்கமும் நிறைந்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் கதையை சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
ஓட்டல் சரவண பவன் உணவாக உரிமையாளர் பி. ராஜகோபால் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் புன்னை நகர் எனும் ஊரில் பிறந்தவர்.
அவரது தந்தையார் விவசாய பின்னணியை கொண்டு வெங்காயம் வியாபாரத்தை செய்து வந்தார். 1973 ஆம் ஆண்டு சென்னை வந்து, சிறிய மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார் ராஜகோபால். பிறகு 1981ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி, கே. கே. நகர் பகுதியில் சரவண பவன் எனும் பெயரில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது தான் முதல் உணவகமாகும்.
அதைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான கிளைகளை நிறுவி, பரந்த உணவக சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தார் ராஜகோபால்.
கடந்த 2001 ஆம் ஆண்டு சரவணபவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் மேன்மையை அடையலாம் என சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலிடம் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே 2 மனைவிகள் இருந்தாலும், ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு, ஜீவஜோதியை 3-ஆவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் ராஜகோபால்.
இதற்காக, ஜிவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து 2001-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி கடத்தினார். கணவரைக் காணவில்லை என்றும், ராஜகோபாலின் ஆட்கள் அவரைக் கடத்திவிட்டதாகவும், சென்னை வேளச்சேரி காவல்நிலையத்தில் புகாரளித்தார் ஜீவஜோதி. விசாரணையை தொடங்கிய காவல்துறை கொடைக்கானல் மலைச் சாலையில் பிரின்ஸ் சாந்தகுமாரின் உடலைக் கைப்பற்றியது.
இதுதொடர்பாக ராஜகோபால், அவரது மேலாளர் டேனியல் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும், எஞ்சிய 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் கடந்த 2004 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இதனை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிரடி தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ராஜகோபால் உள்ளிட்டோர் ஜூலை 7 ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர், சரணடைவதற்கு கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அவர்கள் இருவரை தவிர மற்ற அனைவரும் சரணடைந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கூடுதல் அவகாசம் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்ததோடு, உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஒருநாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா என கண்டித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ராஜகோபாலை வீல் சேரில் அழைத்துவர காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், ராஜகோபாலனின் உதவியாளரான ஜனார்த்தன் மற்றும் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், ராஜகோபாலின் மகன் சரவணன், தனது தந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Discussion about this post