“யுவன் ஷங்கர் ராஜா” இந்த பெயர் ஒரு மந்திரச் சொல். அந்த அளவுக்கு வசியம் செய்யக்கூடிய இசையை தருகிற ஒரு இசை மந்திரவாதி.. ஒருவர் இருவர் அல்ல, இசை மொழி புரியும் அத்தனை பேரையும் கட்டி போடும் ஆற்றல் உடைய ஒரு ஆளுமை என்றே சொல்லலாம். கவிஞனின் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் வேலை அவ்வளவு எளிதல்ல, உயிரை வருடும் வரிகளை எந்த ஒரு பிரயத்தனமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆத்மாவை தீண்ட வைக்க இவரது இசை மட்டும் போதும்.
ஒருவருடைய தனிமை, சோகம், காதல், தோல்வி என அத்தனை ஆற்றாமைக்கும் ஆறுதலாகி போகிறது யுவனின் இசைதான். பலருக்கு நம்பிக்கையும், உத்வேகமும் தரும் தூண்டுகோள், இப்படி எல்லாவித பரிமாணத்தையும் காட்டக்கூடிய ஒரு இசை அமைப்பாளராக இன்றைய காலக்கட்ட நவீன இளைஞர்களால் கொண்டாடப்படுகிறார். கடந்த 24 வருட காலத்தில் 100 படங்களுக்கு மேல் இசை அமைத்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் யுவன்.
சரி, யுவனின் பயணம் எப்படி? எங்கே? ஆரம்பித்தது.. திரை இசை பின்னணி கொண்ட குடும்பம், அப்பா இளையராஜா, ஒரு இசை ஜாம்பவான். படைக்காத சாதனைகளே இல்லை. அண்ணன் கார்த்திக் ராஜா ஏற்கனவே திரை உலகத்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். அதனால் அவரை இசையிடமிருந்து பிரித்து வைக்கமுடியாத ஒரு சூழல் தான். யுவனுக்கு, தான் ஒரு பைலட் ஆகி இந்த உலகத்தை சுற்ற வேண்டும் என்கிற ஒரு சிறு பிள்ளையின் கனவுதான் இருந்துது. அவரால் அதை செய்ய முடியவில்லை. ஆனால், விதி வேறு விதமாக யோசித்தது.
இவ்வளவு கொண்டாடப்படுகிற யுவன், பத்தாம் வகுப்பை தாண்டவில்லை என்பது ஒரு ஆச்சரியமான உண்மைதான். மிக அழகான இசையை கொடுக்கின்ற யுவன் தன்னோட இசை பயணத்தை 16 வயதில் தொடங்கினார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இன்றளவும் இவ்வளவு சிறு வயதில் இசையமைப்பாளராக யாரும் அறிமுகமாகவில்லை. இவர் இசை உலகுக்கு எப்படி வந்தார் என்பதே சுவாரஸ்யமான விஷயம் தான். தன்னுடைய ஆல்பத்திற்காக சில இசைக்கோர்வைகள யுவன் செய்யும் போது, அதில் ஒரு சில மெட்டுக்கள் “அரவிந்தன்” படத் தயாரிப்பாளர் டி.சிவாவிற்கு பிடித்துப் போக, படத்தின் முன்னோட்ட காட்சிகளுக்கான இசைக்கோர்ப்பு பணிகளை செய்ய கேட்டுக்கொண்டார். அவரும் அதை செய்து கொடுக்க, யுவனின் இசை சிவாவிற்கு திருப்தியளிக்க முழு படத்திற்கும் அவரையே இசையமைக்க கேட்டார், பெற்றோரின் சம்மதத்தோடு இசை வானில் சிறகடிக்க தயாரானார் யுவன்.
இளையராஜாவின் மகனாகவே இருந்தாலும், அவ்வளவு எளிதாக ஒன்றும் வெற்றி கிடைக்கவில்லை யுவனுக்கு. 1996-ல் வெளியான “அரவிந்தன்” படமும் சரி, யுவனின் இசையும் சரி பெரிய அளவில் மக்களிடையே எடுபடவில்லை. அடுத்தடுத்து “வேளை”, கல்யாண கலாட்டா” போன்ற படங்களுக்கு இசையமைத்தார். அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது, இன்னும் சொல்லப்போனால் விமர்சகர்கள் யுவனின் இசையை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். அவருக்கான பட வாய்ப்புகளும், அவருடைய கனவுகளும் காணாமல் போகத் தொடங்கியது. அவர் அறிமுகமான காலக்கட்டத்தில் தன்னுடைய அப்பாவான இளையராஜா, இன்னொரு பக்கம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான, தேனிசைத் தென்றல் தேவா- என்று மிகப்பெரிய இசை ஜாம்பவான்கள் தங்களின் இசையால் கோலோச்சி கொண்டு இருந்த காலம். இவர்கள் மத்தியில், யுவன் தன்னை நிருபிக்க ஒரு சரியான வாய்ப்பு தேவைப்பட்டது, காத்திருந்த அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பாக அமைந்தது தான் வசந்தின் “பூவெல்லாம் கேட்டுப்பார்”. தன்னை தனித்துவப்படுத்தி காட்ட, இவ்வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டார் யுவன். படம் வெளியாகி இசையும், பாடல்களும், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பட்டி தொட்டியெங்கும் இவரது பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கியது இளசுகளின் உதடுகள். யுவனின் இசை புதிதாகவும், புதுமையாகவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுதத் தொடங்கின பத்திரிக்கைகள். ராஜா என்ற பெயருக்கு பொருத்தமானவர் என்று புகழப்பட்டார்.
தன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு தயாரானார் யுவன் ஷங்கர் ராஜா.. ஆம், 2000-களின் தொடக்கத்தில் இருந்து யுவனின் யுகம் என்னும் சொல்லுமளவிற்கு யுவனின் இசை ஆதிக்கம் தொடங்கியது. படங்கள் தோல்வியடைந்தாலும், யுவனின் இசை தோற்கவில்லை என்றே சொல்லலாம். பல ஹிட் படங்களையும், பாடல்களையும் கொடுத்த வெற்றிக் கூட்டணியான செல்வராகவன் மற்றும் யுவனின் கூட்டணி அமைந்தது அவரது வாழ்வின் அடுத்த அத்தியாயத்தில்தான். “துள்ளுவதோ இளமை” படத்தின் துள்ளலான இசை இளசுகளின் இதயத்தில் யுவனை நெருக்கமாக்கியது. இவர்களின் வெற்றிக் கூட்டணி “காதல் கொண்டேன்” , “7ஜி ரெயின்போ காலனி” போன்ற காதல் படங்களிலும் தொடர்ந்தது. காதல் படங்களை தாண்டி “புதுப்பேட்டையில்” இருவரும் சேர்ந்து நிகழ்த்திய ஜாலங்கள் மிகவும் சிலாகிக்கப்பட்டது. இசை தந்தை என்றால், கவிஞனின் வரிகளே தாய். அப்படி பார்க்கையில் நா.முத்துக்குமாரின் வரிகள் முத்தாய்ப்பாய் அமைந்தது யுவனின் இசைக்கு சிறப்பு. தமிழ் சமூகம் இரைச்சலை நோக்கி நகர்ந்த போது, தனது மயிலிறகு வார்த்தைகளால் யுவனை கட்டிப்போட்டு மெல்லிசை மெட்டுகளை போட வைத்த பெருமை பட்டாம்பூச்சி விற்றவனான நா.முத்துக்குமாரையே சேரும்.
இக்காலத்தில் தான் ஹிப்-ஹாப் ஸ்டைல் பாடல்கள், ரீமிக்ஸ் பாடல்களை தமிழ் சினிமாவுக்கே உரித்தான ஸ்டைலில் கொடுத்தார் யுவன். இளையராஜாவின் மகன் என்ற பிம்பத்தைப் உடைக்க தொடங்கி, யுவன் எனும் ஆளுமை வளர தொடங்கிய தருணம் இக்காலமே. அமீரின் “ராம்” படத்திற்கு இவரமைத்த இசைக்கோர்வைகள் பலத்த பாராட்டு பெற்றது. இளையராஜாவுக்கு அம்மா செண்ட்டிமென்ட்டுகளில் உச்சம் தொட்ட பாடல்கள் இருப்பது போல், யுவனுக்கு “ஆராராரி ராரோ” பாடல் என்றே சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் 2006-ல் ராம் படத்தின் இசைக்காக சைப்ரஸ் சர்வதேச விழாவில் விருது வாங்கிய ஒரே இந்திய இசையமைப்பாளர் இவர்தான்.. சரியாக இசையமைக்க தெரியவில்லை என்று விமர்சிக்கப்பட்ட யுவன், பின்னாளில் பிஜிஎம் கிங்-காக உருவெடுத்தது அலாதியான வெற்றிக்கதையே. பில்லா, மங்காத்தா, மன்மதன், வல்லவன், சர்வம் போன்ற படங்களின் பிஜிஎம்-களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. யுவனின் பிஜிஎம்-ல் ஒருமுறையாவது திரையில் தோன்ற வேண்டும் என்று ஆசைப்படாத ஹீரோக்களே கிடையாது.
மேற்கத்திய இசை மட்டுமே யுவனால் செய்ய முடியும் என்ற பிம்பத்தை “பருத்திவீரன்” படத்தில் உடைத்தெரிந்தார் அவர். படத்தின் திரைக்கதை, காட்சியமைப்பு, அதன் வெற்றி எவ்வளவு கொண்டாடப்பட்டதோ, அவ்வளவு யுவனின் இசையும் கொண்டாடப்பட்டது. கிராமத்து இசையில் இளையராஜாவின் சாயல் இல்லாமல் இசை அமைப்பது கடினம். அதிலும் வெஸ்டர்ன் டைப் இசையில் கை தேர்ந்தவர்கள் அப்படி இசையமைப்பது மிகக்கடினம். ஆனால், அதை சாதித்தது ஏ.ஆர்.ரகுமானும், யுவனும் மட்டுமே.
யுவனின் இசையில் அப்படி என்ன சிறப்பு என்பவர்களுக்கு, “கற்றது தமிழ்” படம் மிகச்சிறந்த உதாரணம். தனிமையில் குழந்தைகள் இருவர் மலை உச்சியில் பேசும் போது வீசும் காற்றை ஒட்டியே இசை அமைத்திருப்பார் யுவன். அப்படத்தின் பாடல்களும், இசையும், கிட்டார் ஒலியோடு பின்னணியில் ஒலிக்கும் யுவனின் குரலும் நம்மை அறியாமல் நம் கண்களை கலங்கச் செய்யும். தங்க மீன்கள் படத்தின் “ஆனந்த யாளை” மீட்டாத தந்தையோ, மகளோ இருக்க முடியாது. இதுவரை இரண்டு முறை பிலிம்பேர் விருதுகளை வாங்கியுள்ள யுவன், ஆறு முறை பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது தவிர இரண்டு முறை தமிழக அரசின் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். இவை அனைத்தும் யுவன் சிறந்த படைப்பாளன் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
இடையில் சிறிது காலம் சறுக்கி இருந்தாலும், மீண்டு வந்தார் யுவன். ரவுடி பேபி சாங் அள்ளிய லைக்குகளே யுவனின் “கம் பேக்கிற்கு” ஆதாரம். இன்றைய நவீன யுகத்தில் தனிமையில் இருக்கும் இளைஞர், இளைஞகிகள் அனைவருக்கும் தாலாட்டாகிப் போகிறது யுவனின் குரலும், அவரது இசையுமென்பதில் மிகையில்லை. ரசிகர் கூட்டத்தின் “யூத் ஐகான்” ஆக திகழும் யுவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தன் தனித்துவ இசையால் மென்மேலும் தமிழ் இசை உலகில் அவர் கோலோச்சுவார் என்ற எதிர்பார்ப்புகளோடும், வாழ்த்துகளோடும் விடைபெறுகிறோம்.
Discussion about this post