கஜா புயலில் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரமே மத்தியக்குழுவின் பாராட்டு என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள அத்திபுலியூர் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர் .பின்னர் அருகே உள்ள குருகத்தி கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெறும் தூய்மைப்பணிகளை மேற்பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவுகள் முறையாக வழங்கப்பட்டு வருகிறதா என்பதை கேட்டறிந்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் தங்கமணி, கஜா புயலின் போது மக்களை காக்க அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணாமாக ஆய்வுக்கு வந்த மத்தியக்குழு,
மின்பணிகள் மற்றும் கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்றதை கண்டு பாராட்டு தெரிவித்து விட்டு சென்றனர். எங்கள் பணிக்கு மத்திய அரசு கொடுத்த அங்கீகாரம்தான் இந்த பாராட்டு என்று அவர் தெரிவித்தார். மேலும் கஜா புயல் பாதிப்புகளில் அரசு எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் இதில் அவதூறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post