கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக, நாளை விமானப்படை சார்பில் விமான அணிவகுப்பு நடத்தப்படும் என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிபின் ராவத், கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக, ஞாயிற்றுக்கிழமையன்று விமான அணிவகுப்பு நடத்தப்படும் என தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் ராணுவம் சார்பில் பேண்ட் வாத்தியக்குழு நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும், கப்பற்படை சார்பில் போர்க்கப்பல்களில் இருந்து புறப்படும் போர் விமானங்கள், மருத்துவமனைகளின் மீது மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் காவலர்கள் சிறப்பாக செயல்படுவதால், ராணுவத்தின் தேவை இதுவரை இல்லை எனவும் பிபின் ராவத் தெரிவித்தார்.
Discussion about this post