கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளி மாணவர்களுக்கும், மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காய்ச்சல், தமிழகத்தில் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு வகைகளிலும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்த வகையில், வரும் திங்கட் கிழமை முதல், தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் பள்ளி மாணவர்களுக்கு 2 வாரங்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதே போன்று, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள, எல்.கே.ஜி வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக, பீகார், டெல்லி உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post