கிரிக்கெட்டில் தற்போது அதிக பேசப்பட்டு வரும் வீரர் விராட் கோஹ்லி தான். தனது அபார ஆட்டத் திறமையால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரை தனக்கு சொந்தம் ஆகியுள்ளார் விராட். இது ஒருபுறம் இருக்க சத்தமில்லாமல் எல்லா சாதனைகளையும் தன் வசம் ஆக்கி வருகிறார் ரோஹித் சர்மா. 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவரது ஆட்டத் திறன் மிகவும் அற்புதமாக உள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை தன் வசம் ஆக்கியுள்ளார் ரோஹித்.
2007ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமான ரோஹித் சர்மா, 2012ஆம் ஆண்டு வரை அவரது ஆட்டத் திறன் சராசரியாகவே இருந்தது. அதன்பின் 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவரது ஆட்டத்திறன் வெகுவாக உயர்ந்துள்ளது.
ரோஹித் சர்மாவை பார்த்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா என உலக கிரிக்கெட் நாடுகள் பயந்து போனது மட்டுமில்லாமல் அவரது ஆட்டத்திறமையை வெகுவாக பாராட்டியுள்ளது. சர்வதேச போட்டிகளில் 22 சதத்தை பூர்த்தி செய்துள்ள ரோஹித் சர்மா, கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் 3 இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதே போல், சர்வதேச ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோருக்கும் ரோஹித் ஷர்மாவே சொந்தக்காரர். இலங்கைக்கு எதிராக அவர் அடித்த 264* என்பதே சர்வதேச ஒருநாள் போட்டியின் தனிநபர் அதிக பட்ச ஸ்கோர் ஆகும். சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்களை பட்டியலில் இந்தியாவின் டோனி 4வது இடத்திலும் (222 சிக்ஸ்), ரோஹித் சர்மா 5வது இடத்திலும் (215 சிக்ஸ்) உள்ளனர். அதே போல், சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை (16 சிக்ஸ்) அடித்த வீரரும் ரோஹித் சர்மா தான்.
கேப்டன் பதவியிலும் அசத்திய ரோஹித்
தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரோஹித், தனக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்ட போதெல்லாம் அசத்தியுள்ளார். இதுவரை 8 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக பணியாற்றியுள்ள ரோஹித், 7 போட்டியில் வென்றுள்ளார். ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார். அதேபோல் டி20 போட்டியில் 12 போட்டிக்கு கேப்டனாக பணியாற்றியுள்ள ரோஹித், 11 போட்டியில் வென்றுள்ளார், ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், விராட் கோஹ்லியை விட ரோஹித் ஷர்மாவே சிறந்த கேப்டன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இப்படி சத்தம் இல்லாமல் பல்வேறு சாதனைகளை தன் வசம் ஆக்கி கொள்கிறார் ரோஹித். இதனால் தான் ரோஹித் ஷர்மாவை “The Hit Man” என்று கிரிக்கெட் உலகில் செல்லமாக அழைக்கிறார்கள். நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் ரோஹித் ஷர்மாவுக்கு 200வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். தனது 200வது போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களம் காண்கிறார்.
Discussion about this post