ஐக்யூ எனப்படும் புத்திக் கூர்மையில் உலகின் மிகப் பெரிய அறிவியலாளர்களான ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் போன்றவர்களை விஞ்சியுள்ளார் ப்ரீயா மங்கோத்ரா என்ற 10 வயது சிறுமி.
தனி நபரின் அறிவுக் கூர்மையைக் கண்டறிய நடத்தப்படும், உலகின் மிகப் பழமையான மற்றும் மிகக் கடினமான தேர்விற்கு ‘மென்சா’ என்று பெயர். இந்தத் தேர்வில் ஒருவர் பெறக் கூடிய அதிகபட்ச மதிப்பெண்ணாக 160 மதிப்பெண் கருதப்பட்டது. இந்த 160மதிப்பெண்கள் உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஐ.க்யூ.விற்குக் கொடுக்கப்பட்டது, அவர் இந்தத் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவருடைய புத்திக் கூர்மையைக் கணக்கிட்டு இந்த மதிப்பெண் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதே மதிப்பெண்ணே மறைந்த மாபெரும் அறிவியலாளர் ’ஸ்டீபன் ஹாக்கிங்’குக்கும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண்ணான ப்ரீயா மங்கோத்ரா, தன்னுடைய 10ஆவது வயதிலேயே இந்த மென்சா தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். இதுவரை மென்சா தேர்வின் வரலாற்றில் 18 வயதுக்கு உட்பட்ட ஒருவர் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் இதுவாகும். இதன் மூலம் மென்சா தேர்வின் உச்சபட்ச மதிப்பெண் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
அறிவுக் கூர்மையில் உலகின் மிகப் பெரிய அறிவியலாளர்களையெல்லாம் விஞ்சிய ப்ரீயாவுக்கு அறிவியலாளர் கனவெல்லாம் இல்லை என்பது ஆச்சர்யமான உண்மை.திரைப்பட இயக்குநராக ஆவதே அவரது விருப்பமாக உள்ளது. புத்தகங்கள் வாசிப்பது, நாடகங்கள் பார்ப்பது,சதுரங்கள் விளையாடுவது, டேக்வாண்டோ தற்காப்புக் கலை ஆகியவற்றிலும் இவருக்கு ஆர்வம் உள்ளது. இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் உலகின் மிக அதிக புத்திக் கூர்மை உள்ள நபர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது, இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை தரக் கூடியதாக உள்ளது.
Discussion about this post