பல கோடி இதயங்களுக்கு பாடல்கள் மூலம் மருந்தளித்த இசை உலகின் பிதாமகன் எஸ்பிபி-க்கு தனது பாடல்களே தற்போது மருந்தாக மாறியுள்ளது.
1946 ஆம் ஆண்டு நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம், இந்திய பிரபல பின்னணி பாடகராக அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 1966ம் ஆண்டு திரையுலகில் தனது முதல் பாடலை பாடிய அவர், அன்று முதல் 40ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை பெற்ற எஸ். பி. பி., முறையாக கர்நாடகா இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்கு பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் தான்.
தமிழில் மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே என்ற பாடல் மூலம் தனது காதலியை நினைத்து வர்ணித்து பார்க்காத காதலனே இருக்க முடியாது என்ற அளவுக்கு, பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்து, தேசிய விருதையும் பெற்றார் எஸ் பி பி.
எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களை ஒரேநாளிலும், இந்தியில் 16 பாடல்களை 6மணி நேரத்தில் பாடியும் சாதனை படைத்துள்ளார். இந்த இசை பிதாமகனை கௌரவிக்கும் பொருட்டு, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் தான் கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த 13 ஆம் தேதியில் இருந்து மோசம் அடையத் தொடங்கியது. கொரோனா தொற்று கடுமையாக தாக்கியதால், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே மெல்லிசை பாடல்களை கேட்கவைத்து அதன் மூலமாக அவரது மன இருக்கத்தை போக்கும் சிகிச்சையும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எஸ்பிபி சிகிச்சை பெறும் அறையில் அவர் பாடிய பாடல் இசைக்க தொடங்கியுள்ளது. இதன் மூலமாக அவரின் மன அழுத்ததை குறைத்து SPB யின் கான்சியஸ் அளவை உயர்த்தலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள். 60’s முதல் 2k kids வரை துவண்டு கிடக்கும் இதயங்களையும், தட்டியெழுப்பி புத்துயிர்பெற வைத்துள்ள இவர், தனது பாடல்கள் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று விரைவில் இசையுலகின் பிதாமகனாக வலம் வருவார் என்ற நம்பிக்கையில் கோடிக்கணக்கான ரசிகர்களுடன்…..
Discussion about this post