19 வயது நிரம்பிய இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ், சர்வதேச தடகள போட்டிகளில், 19 நாட்களில் 5 தங்கப்பதக்கம் வென்று அபார சாதனை படைத்துள்ளார். அது பற்றிய விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…..
கடந்த இரண்டு நாட்களாக கூகுளில் தேடல் பக்கதில் அதிகமாக தேடப்பட்டு வரும் பெயர், ஹிமா தாஸ். ஓட்டு மொத்த இந்தியாவையும் பெருமை அடைய வைத்திருக்கும் இந்த பெயர், அவ்வளவு எளிதாக கூகுளில் இடம் பெறவில்லை. பல அவமானங்கள், சோதனைகள், விமர்சனங்கள், கிண்டல்கள் இவை எல்லாவற்றையும் தாண்டி ஜெயித்துக் காட்டி, இன்று ஒட்டு மொத்த பெண்களுக்கும் ஒரு ரோடல் மாடலாக மாறியுள்ளார் ஹிமா.
அசாம், நவ்காவ் மாவட்டத்தின் திங் நகரில் உள்ள கண்டுலுரிமாரி என்ற சிறு கிராமத்தில் பிறந்த அவர், விவசாயக் குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர். கவுகாத்தியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரது ஓட்டத்திறனைக் கண்டு வியந்த பயிற்சியாளர் நிபுண் தாஸ், பயிற்ச்சிக்கான முழு செலவுகளையும் ஏற்று ஊக்குவித்தார்.
2018ம் ஆண்டு ஆசிய போட்டிகளில், பெண்கள் 400மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் தங்கமும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளியும் வென்றார். மேலும், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றார். இவரது சாதனைகளை பாராட்டி, இந்தியன் ஆயில் நிறுவனம் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பதவி வழங்கியது. மறுபுறம், ஹிமா தாசின் சாதனைகளை கவுரவிக்கும் விதமாக, இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி பெருமைப்படுத்தியது.
அதன் பின்னர் நடைபெற்ற ஆசியப் போட்டிகளிலும் இந்தியா சார்பில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை குவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில், 12 ஆம் வகுப்புத் தேர்வு காரணமாகப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ஹிமா தாஸ், ஜூன் மாதம் மீண்டும் களத்தில் இறங்கினார். ஜூலை 2 ஆம் தேதி போலந்து நாட்டில் நடைபெற்ற போஸ்னான் தடகளப் போட்டியில், 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று தனது பதக்க வேட்டையைத் தொடங்கினார். 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து நான்கு தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற கிராண்டு ப்ரிக்ஸில், 400 மீட்டரை 52.9 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன் மூலம், 19 நாட்களில் சர்வதேச அளவில் 5 தங்க பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார் ஹிமாதாஸ்.
தடகள போட்டியில் சர்வேதச அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஹிமா தாஸுக்கு, ட்விட்டரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல், பலரும் வாழ்த்தி வருகின்றனர். இவரின் அசாத்திய திறமையாலும், தொடர் வெற்றியாலும், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெறுவார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். மேலும், தன்னுடைய வறுமையான சூழலிலும், தன் ஒரு மாத சம்பளத்தின் பாதியை, அசாம் வெள்ள நிவாரணத்திற்கு அளித்து, தன்னுடைய பொதுநல சிந்தனையால், பலருக்கும் முன்மாதிரியாக ஹிமா தாஸ் திகழ்கிறார் என்பதே உண்மை…
Discussion about this post