தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித் தொகை 985 கோடி ரூபாயை 2 மாதத்தில் வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஆயிரத்து 765 கோடி ரூபாய் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 31 கோடி ரூபாய் உதவித் தொகையை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் தமிழக அரசுக்கு அவ்வப்போது நிதி விடுவிக்கப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்திற்காக 4 ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்புதல் கிடைத்தவுடன் நிலுவை தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய சமூக நீதித்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கான தொகையை விடுவிக்கவேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், 2017-18ஆம் ஆண்டு வரை தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை 984 கோடியே 91 லட்சம் ரூபாயை 2 மாதத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Discussion about this post