தேர்வு இல்லாமல் தேர்ச்சி – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கலை, அறிவியல், பொறியியல் மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளில் தேர்ச்சி அடையாமல், நிலுவையில் உள்ள பாடங்களுக்கு கொரோனா காரணமாக தேர்வு நடத்த இயலவில்லை. நோய்த்தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து, தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையில் அரசின் முடிவு உள்ளதாகவும், 25 % மதிப்பெண்ணுக்கு கீழ் வாங்கி தோல்வி அடைந்தவர்களும், 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் மேலும் குறையும் நிலை உருவாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

 

இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்குடன் இணைத்து பட்டியலிடவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Exit mobile version