சாத்தான்குளம் வழக்கு – நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளத்தில், தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சி.பி.ஐ.-ன் நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட மற்றொரு கைதியான ராஜாசிங் வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதில், சி.பி.ஐ. தரப்பில் இரண்டு வழக்குகளில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு, இரண்டு வழக்குகளையும் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சாத்தன்குளம் காவல் நிலையத்தில் கைதிகள் ராஜாசிங், மார்டின் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டது குறித்தும், தட்டார் மடத்தில் செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்டதில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கு உள்ள தொடர்பு குறித்தும் சி.பி.சி.ஐ.டி. பதில்மனுத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் தற்போது வரை நடைபெற்ற விசாரணை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Exit mobile version