புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆதிக்க சாதியினரால் இந்தச் சம்பவம் அரங்கேறியிருந்ததைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த கூடுதல் மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 33க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 49க்கும் மேற்பட்ட கோவில்களில் சாதிய பாகுபாடு உள்ளதாகவும், 29 டீக்கடைகளில் வெவ்வேறு விதமான இரட்டை குவளை முறைகள் பின்பற்றப்படுவதாகவும், சில கிராமங்களில் குளங்களில் குளிப்பதற்கு அனுமதிக்காமல் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகவும் ஆய்வு சொல்கிறது.எனவே இது தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனுதாரர் சண்முகம் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வானது மனுதாரர் சண்முகத்தின் குற்றச்சாட்டு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேற்கொண்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. சமூகநீதி தான் தங்களின் கொள்கை என்று கூறிக்கொண்டு ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் இந்த வேங்கை வயல் நிகழ்வில் மொளனித்திருப்பது கொடுமையானது. தீண்டாமைக் குற்றங்கள் தமிழகத்தில் குறைக்க இந்த ஆட்சியாளர்கள் சிறிதேனும் அதன்மீது கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து, பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று சமத்துவ பொங்கல் கொண்டாடுவது போன்ற கண் துடைப்பில் ஈடுபடுவது நகைப்பிற்குரிய விஷயமாகும்.
Discussion about this post