தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சத்தியமங்கலம், ஆலம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மாலை முதல் மிதமான மழை பெய்தது. 2 மணி நேரம் பெய்த கன மழையால் தெருக்களில் மழைநீர் புரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இதேபோன்று, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, பின்னலூர், ஒரத்தூர், புவனகிரி, கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து கனமழை பெய்தது அரசின் குடிமராமத்து பணிகள் மூலம் குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளதால் மழைநீர் வீணாகாமல் ஏரி, குளங்களுக்கு சென்றது.
குள்ளஞ்சாவடி அடுத்த ரோட்டுபொட்டவெளி கிராமத்தை சேர்ந்த அம்புஜம் மற்றும் சாந்தி ஆகிய இருவரும் குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது மின்னல் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Discussion about this post