திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவி வருகின்றன.
சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான, பணப்பாளயம், வடுகபாளையம், வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மழை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான பார்யார் காட்டேரி, சேலாஸ், அரவங்காடு பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், மழையின் காரணமாக குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், சிரமத்துடன் வாகனத்தை இயக்கினர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஓமலூரில் திடீரென பலத்த காற்று வீசியது. மேகங்கள் திரண்டு கனமழைக்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால் லேசான தூறல் மட்டுமே இருந்தது. காமலாபுரம்,சிக்னம்பட்டி, தாராபுரம், தும்பிபாடி, தின்னப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. பின்பு லேசான மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் சூறாவளி காற்று வீசியதால் மக்கள் சிரமப்பட்டனர்.
Discussion about this post