வெப்பச்சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிப்பதாகவும், இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 24ஆம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா – வங்கதேசத்தில் வருகிற 26ஆம் தேதி கரையை கடக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post