வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி, தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14-ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் பகல்பத்து, ராபத்து விழாக்களில் உற்சவர் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது.
ரத்தின அங்கி அணிந்து காட்சியளித்த உற்சவர் நம்பெருமாள், பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் சொர்கவாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோவிந்தா, ரங்கா என்ற முழக்கங்களுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி 2 ஆயிரத்து 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதேபோல் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொர்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவர் பார்த்தசாரதி, சொர்கவாசலில் எழுதருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காலை 6 மணி முதல் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
Discussion about this post