தேசிய டெங்கு காய்ச்சல் தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் டெங்கு நோய் பரவுவது 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு காய்ச்சல் தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அச்சுறுத்தும் நோய்கள் இருந்தாலும், டெங்கு காய்ச்சலும் சமீபத்தில் உயிரை பறிக்கும் நோயாக மாறியுள்ளது. ஏடிஎஸ் என்ற வகை கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. தூய்மையான நீர் 7 நாட்களுக்கு மேல் தேங்கி இருந்தால் அதில் ஏடிஎஸ் கொசு உருவாகி டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்கிறார் மருத்துவர் லலித் நாராயணன்.
டெங்குவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை சார்பில் எடுத்த நடவடிக்கையால் கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு 50 விழுக்காட்டுக்குமேல் குறைந்திருப்பதாக சுகாதாரம் மற்றும் டெங்கு தடுப்பு பிரிவு துணை இயக்குனர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பெரியளவிலான பாதிப்புகளும், மருத்துவ செலவுகளும் இருந்தாலும் டெங்கு பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது மிகவும் எளிது என்கின்றனர் மருத்துவர்கள். வசிக்கும் இடங்களை சுற்றிலும் தூய்மையான நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே டெங்கு நோயில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்கிறார் டெங்கு காய்ச்சல் சிறப்பு பிரிவு மருத்துவர் லலித் நாராயணன்.
டெங்கு என்பது ஒருவகையான வைரஸ் காய்ச்சல். சுகாதாரத்துறை அறிவுறுத்தும் வழிமுறைகளை முறையாக பின்பற்றி கடைபிடித்தாலே டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளலாம் என்பதே நிதர்சனம்.
Discussion about this post