ஹத்ராஸ் இளம்பெண் கொலை வழக்கில், உண்மை கண்டறியும் சோதனைக்கு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஹத்ராசில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொல்லப்பட்ட இளம்பெண் வழக்கை, உத்தர பிரதேச அரசின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் தந்தையின் உடல்நிலையை மருத்துவக்குழு பரிசோதித்தது. அப்போது, உண்மை கண்டறியும் சோதனை செய்ய மாட்டோம் என உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
தனது மகளை கொடூரமாக கொலை செய்த 4 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை விடுவிக்க வேண்டும் என்று உயர் சாதியை சேர்ந்தவர்கள் உத்தர பிரதேச மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
உண்மை கண்டறியும் சோதனை என்றால் என்ன?
ஒருவரின் உடலுக்குள் மயக்க மருந்தைச் செலுத்துவதன் மூலம் அவரின் கற்பனைத் திறனை மட்டுப்படுத்தி, மனதை அறை மயக்க நிலைக்கு கொண்டு சென்று, அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காகவோ, அல்லது வழக்கின் கண்டு பிடிக்கப்படாத ரகசியங்களை அறிந்து கொள்ளவோ மேற்கொள்ளப்படும் முயற்சிதான் இந்த உண்மை கண்டறியும் சோதனை.
Discussion about this post