முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அந்த தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகிய இரண்டிலும் ஹர்திக் பாண்டியா அசத்தினார். இதனால் உலக கோப்பையில் அவரது இடம் கிட்டத்தட்ட உறுதியானது. இதனால் தமிழக வீரர் (ஆல் ரவுண்டர்) விஜய் ஷங்கர் வாய்ப்பு கேள்வி குறியானது.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விஜய் ஷங்கரும் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முதல் வரிசை வீரராக இறங்கி, விஜய் ஷங்கர் அதிரடியாக ஆடி அசத்தினார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா விலகி இருப்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் அவருக்கு கட்டாயம் வாய்ப்பு உண்டு. இதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், இந்திய அணிக்கு உலக கோப்பை தொடருக்கு இரண்டு வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் விளையாடுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Discussion about this post