தமிழக மக்களால் ஒரு திரைப்படப் பாடலாசிரியராகவே அதிகம் அறியப்பட்ட நா.முத்துக்குமாரின் கவிதைப் பயணம் கல்லூரி மேடைகளில்தான் தொடங்கியது. ‘பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்’ – என்று சொல்லி மேடையை ஆக்கிரமிக்கும் நா.முத்துக்குமாருக்கு கவிதையோடு பேச்சும் நன்றாகவே வாய்த்திருந்தது. ஆனாலும் கவிதைதான் அவரைக் காலப் போக்கில் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டது.
புத்தகங்களின் புடைசூழவே வளர்ந்த நா.முத்துக்குமார் குறைந்தது ஒரு லட்சம் புத்தகங்களையாவது படித்திருப்பார் – என்கின்றனர் அவரது நெருங்கிய நண்பர்கள். அந்த புத்தகங்களின் சாரங்கள் அவர் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் எளிய வடிவத்தில் வழிந்தன.
தனது கல்லூரிக் காலத்தில் சென்னையில் சைவ உணவுக் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியொன்றில் நா.முத்துக்குமார் கலந்து கொண்டார். சைவ உணவுக் கழகம் நடத்தும் போட்டி என்பதால் அனைவரும் சைவ உணவுகளைப் பற்றி மட்டுமே பேச வேண்டிய கட்டாயம். நா.முத்துக்குமாரின் முறை வந்த போதோ அவர், ‘எனக்குப் பிடித்த உணவு பிணம்’ – என்று தனது பேச்சைத் தொடங்கினார். மொத்த அரங்கமும் அதிர்ந்து அமைதியானது.
பின்னர் முத்துக்குமார் தொடர்ந்தார், ‘அரிசி என்பது நெல்லின் பிணம், கூட்டு என்பது காயின் பிணம், தோசை என்பது மாவின் பிணம்’ – இப்போது அரங்கம் கைத்தட்டல்களில் அதிர்ந்தது. அந்தப் பேச்சைப் பல மேடைகள் எதிரொலித்தன.
இன்னொரு முறை அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டியொன்றில் சுதந்திரம் என்ற தலைப்பில் கவிதை வாசிக்க வேண்டும், மேடைக்குக் கீழே மாணவர்கள் கத்திக் கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தனர். ஒடிசலான ஒரு உருவம் மேடை ஏறியதை அவர்களில் பெரும்பாலானோர் கவனிக்கவில்லை. மைக்கைப் பிடித்த நா.முத்துக்குமார் ஒரே நிமிடத்தில் தனது 3 வரிக் கவிதையை படித்தார். அந்த அரங்கில் இருந்தவர்களின் அனைவரின் மனதிற்குள்ளும் அந்தக் கவிதை போய் உட்கார்ந்து கொண்டது. பின்னர் சிறிது காலத்தில் ’கற்றது தமிழ்’ படத்தின் விளம்பர சுவரொட்டிகள் வரை அந்தக் கவிதை பயன்படுத்தப்பட்டது. கவிஞனின் பார்வைகு உரிய வரையறைகளை உடைத்த அந்தக் கவிதை,
“புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
என்னிடம் இருந்து பறிக்கிறான்,
பூனை வளர்க்கும் சுதந்திரம்” – என்பது.
நா.முத்துக்குமாரின் தூர் – என்ற கவிதையை ஒரு மேடையில் சுஜாதா வரிக்கு வரி புகழ்ந்தார். பின்னர் பலரும் அந்தக் கவிதையை தேடினார்கள், இணையம் வாய்க்காத அந்தக் காலகட்டத்தில் கையெழுத்தில் அந்தக் கவிதை பகிரப்பட்டது. பின்னர் புத்தகக் கண்காட்சியில் வாசகர்களால் தூர் கவிதை கட் அவுட் வைக்கப்பட்டு போற்றப்பட்டது. தமிழ் உலகம் ஒரு கவிதையை அண்ணார்ந்து படித்தது அதுதான் முதல்முறை.
அவரது பட்டாம்பூச்சி விற்பவன் – தொகுப்பும், நியூட்டனின் மூன்றாம் விதி – தொகுப்பும் பல்வேறு கவிதை மற்றும் பேச்சு மேடைகளை ஆக்கிரமித்தன. எழுத்தாளர் சுஜாதா விகடனின் கற்றதும் பெற்றதும் பகுதியில் நா.முத்துக்குமாரைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதினார். அந்தக் கட்டுரை நா.முத்துக்குமாரை தமிழகத்தின் மக்களுக்கு இன்னும் அருகாகக் கொண்டு சேர்த்தது.
இதனால் தமிழ்க் கவிதை உலகம் நா.முத்துக்குமாரை பாராட்ட வேண்டும் என்ற சுஜாதாவின் ஆசை நிறைவேறியது. ஆனால் அதே கட்டுரையில் சுஜாதா , ’நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்’ – என்றும் எழுதி இருந்தார் அந்தப் பிரார்த்தனைதான் கைகூடவில்லை.
மேடைகளில் இருந்து திரைப்படத் துறைக்கு பாடலாசிரியரகவும், வசன ஆசிரியராகவும் நா.முத்துக்குமார் புலம் பெயர்ந்துவிட்டாலும், திரைத்துறை அவரை விழுங்கிய பிறகு காலம் அவர் உடலை செரித்தும் விட்ட நிலையில், இன்றும் நா.முத்துக்குமார் மேடைகளின் பேசு பொருளாகவே இருக்கிறார்.
“நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்,
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்” – என்பது போன்ற இவரது வரிகளைக் கடப்பவர்களால், அந்த வரிகள் கொடுக்கும் உணர்வை யாருடனும் பகிராமல் இருக்கவே முடியாது. மனங்களை ஆக்கிரமித்து மேடைகளை வெல்லும் கலையின் நாயகன்தான் நா.முத்துக்குமார்.
இன்னும் எவ்வளவோ இருக்கின்றது நா.முத்துக்குமாரைப் பற்றிப் பகிர… என்ன அவசரம்? அவரது நினைவுகளை மறக்கவா முடியும்? ஒவ்வொன்றாகப் போற்றுவோம்.
ஆனந்த யாழை மீட்டியவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
Discussion about this post