தென் இந்தியாவின் பிரபலமான உணவான பரோட்டாவிற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு, எதிர்ப்பு தெரிவித்து, ஹேஷ்டேக்கை உருவாக்கி இணைய வாசிகள் அதில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கர்நாடகாவை சேர்ந்த தனியார் உணவு உற்பத்தி நிறுவனம் அளித்த புதிய விளக்கத்தில், ரொட்டி வகையில் பரோட்டா சேராது என்பதால் பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என கூறியிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த பரோட்டா பிரியர்கள், ட்விட்டரில் HandsOffParotta என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பதிவில் நாடு சந்திக்கும் அனைத்து சவால்களுடன் பரோட்டாவின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் நாம் கவலைபட வேண்டும் போல் தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார். இருப்பதை வைத்து மாயம் செய்யும் இந்திய திறமைகளை வைத்துப் பார்க்கும்போது விரைவில் பரொட்டிகள் என்ற புதிய உணவைத் தயார் செய்வார்கள் என்று நினைப்பதாகவும், ரொட்டியா, பரோட்டாவா என்ற வகைப்படுத்தலுக்கு அது சவாலாக விளங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post