ஹகிபிஸ் புயலால் ஜப்பானில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்து, ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஹகிபிஸ் புயலால் ஜப்பான் கடுமையான மழையையும், சூறைக்காற்றையும் சந்தித்துள்ளது. சூறைக்காற்று மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
புயல் மற்றும் கனமழைக்கு நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டனர். விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
1958ல் ஜப்பானில் சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 5 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.